Wednesday, August 16, 2017

இனி பதிவுகள் இந்த தளத்தில்

இனி இந்த தளத்தில் வந்த பதிவுகள் இனி இங்கு வெளிவரும்...


பனுவல் மணம்

Saturday, July 22, 2017

வென்முரசு : முதற்கனல் - ஜெயமோகன்உலகின் மிக நீண்ட நாவல் வெண்முரசு என்ற இடத்தை இது முழுவுறும் போது அடையும். கிட்டத்தட்ட முப்பது ஆயிரம் பக்கங்கள் என்று இலக்கு கொண்டு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் 2014 முதல் வெளிவந்துகொண்டு இருக்கிறது. ஆஸ்கர் விருது பெற்ற எந்த சமகால உலக எழுத்தாளர் உடன் ஜெயமோகன் படைப்புகளை எந்த ஐய்யமும் இல்லாமல் ஒப்பிடலாம். இது ஒரு நவீன மஹாபாரதம் நாவல், அப்படி என்றால் மஹாபாரதத்தை அப்படியே திருப்பி எழுதுவது அல்ல.  எழுத்தாளர் மிக மிக சுதந்திரமா அதைவிட ஆழமான இலக்கிய நடை கொண்டு மிக விரிவாக புதுதாக எழுதப்படும் காவியம். மிக தீவிர இலக்கிய வாசகர்கள் கூட சற்று தினறும் அளவுக்கு இதன் நடை இருக்கிறது, சிலவற்றை என்னதான் கற்பனை மனம் கொண்டு சிந்தித்தாலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மொழிநடை நம்மை தினற செய்கிறது. சாதாரண வாசிப்பு நேரத்தை விட இது இரண்டு மடங்கு நேரத்தை எடுத்து கொள்கிறது, காரணம் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக வாசித்தல் மட்டுமே இதை உள்வாங்கி சற்றேனும் ருசிக்க முடியும், ஒரு வார்த்தை தவறினாலும் பொருள் சிக்காது. இந்த முதற்கனல் நாவல் இந்த மாபெரும் காவியத்தின் வாசல். ஆயிரம் ஆயிரம் யோசனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவி எங்கும் இருள் சூழ்ந்து ஒளியற்று கிடந்தது, நாகங்களின் ஆதி அன்னை தோன்றிற்று அதன் வால் பாதால அறையிலும் தலை மேலோகத்திலும் கிடந்தது என்று நாவல் பிரஞ்ச தோற்றம் குறித்து சொல்லி கதைக்குள் நம்மை கால் வைக்க அழைக்கிறது. பல கிளைக்கதைகள் பல இடங்களில் சூதர்களாள் பாடபடுகிறது ஆனால் எல்லா கதைகளும் மையத்தோடு இணைகிறது. கங்கையின் மைந்தர் பீஷ்மரால் கவரப்பட்டு ஆன்மா அழிக்கப்பட்டு கொற்றவை கோலம் கொண்டு அழிந்த காசி நாட்டு இளவரசி அம்பையின் அல்லால் படும் கண்ணீர் எப்படி பீஷ்மரை பழி வாங்கும் என்னும் முதற்கண்ணீர் கனல் இதில் தொடங்குகிறது.
ஜனமேஜயன் ஈரேழு உலகத்தில் உள்ள நாங்கள் அனைத்தும் அழிக்க வேள்வி நடத்துவதில் தொடங்கி, தட்சன் பற்றி வரும் அத்தியாயம் மிக அற்புதமானது. இதில் நெகிழ்ச்சியும் அச்சமும் அளிக்கும் இருவர் அம்பை, சிகண்டினி.

காடுகளில் கைவிடப்பட்ட பெண் குழந்தை கரிய பன்றின் முலையில் பால் குடித்து வளர்கிறது பிறகு அம்பையிடம் வந்தடைகிறது, தான் என்ற உணர்வை இழந்து திரிந்த அம்பை மெல்ல மெல்ல அந்த குழந்தையை ஏற்கிறாள், பிறகு குழந்தை வளர்ந்த பின் அழைத்து
 நீ என் மகன் சிகண்டி

“இனித்தாளமுடியாது. ஒவ்வொரு கணமும் என்மேல் மலையெனக்குவிகிறது. இந்த வதையை முடிக்கவிழைகிறேன்.”

“நீ பீஷ்மரை போர்க்களத்தில் கொல்லவேண்டும். அவர் நெஞ்சை என் பெயர்சொல்லி விடும் உன் வாளி துளைத்தேறவேண்டும்” என்றாள்.  பிறகு சிதை ஏறினால் ஆயிரம் ஆயிரம் கைகள் வான் நோக்கி துழாவி அலையும் தீச்சுவாலைகள் அவளை அள்ளி அனைத்து தன்னுள் கரைத்து புகுத்திகொள்கிறது. கடும் தவம் கொண்டு ஆணாக மாறி சிகண்டினி பீஷ்மரை பழி வாங்க ஆஸ்தானாபுரம் நோக்கி வருகிறான். ஒரு மகத்தான படைப்பு தமிழில் வெளியாகிறபோது தமிழ் சூழல் அதை எப்படி அணுகுகிறது என்று பார்த்தால் நெருடல் தான். இந்த காவிய கடலில் ஒரு துளி பருகி இருக்கிறேன். இரண்டாம் நாவல் மழைப்பாடல் தொடங்குகிறேன்....

www.venmurasu.in

Tuesday, June 27, 2017

பசித்த மானிடம் - கரிசான் குஞ்சு

நாவல்            : பசித்த மானிடம் 
எழுத்தாளர்    : கரிச்சான் குஞ்சு(நாராயணசாமி) 
நாவல் வகை  : இலக்கிய புதினம் 
நாவல் அளவு  : 267 பக்கங்கள் 
பதிப்பகம்         : காலச்சுவடு


மனிதனுக்கு வயிறு பசியை விட பெரிய பசி உடல் பசி, உடல் பசியை மையமாக கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டு உள்ளது.
வாழ்வின் இருவேறு துருவங்கள், கணேசன் வாழ்வில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் போன போக்கில் வாழ்கிறான். கிட்டா கடினமாக உழைத்து பணம் காசு அந்தஸ்து என்று உயர்ந்து திருமணம் செய்து பிள்ளை குட்டி என்று வாழ்கிறான். 1946 காலகட்டத்தில் கணேசன் ஒருவர் உடல் பசிக்கு வைப்பாட்டியாக செல்கிறான் என்பது தமிழ் சூழலில் வியப்பாக உள்ளது. சுமார் பத்து வருடங்கள் ராவுத்துர் இடம் இருக்கிறான் பிறகு ஒரு ஜவுளி தொழிலாளர் உடன் பிறகு அவனுக்கே உடல் பசிக்கிறது தேடி கொண்டு போய்விடுகிறான். ஒரு டீச்சர் உடன் சிலகாலம், பிறகு ஒரு லேடி டாக்டர் அவனை வைத்து அவள் உடல் பசி தீர்த்து கொள்கிறாள், விளைவு கணேசனுக்கு தொழு நோய் வந்துவிடுகிறது. பிறகும் ஒரு பிச்சைகார குருடியோடு வாழ்கிறான். அன்பு தான் இந்த உலகில் அடிப்படை ஆதாரம் என்று நாம் நினைக்கையில் கணேசன் அப்படி ஒரு இடத்திற்கு போகிறான் முதலில் அவனும் அப்படி தான் நினைத்தான் நாள் ஓட ஓட அவன் உள் இருக்கும் அந்த காமம் உடைத்து கொண்டு வழிகிறது, தங்கள் வாழ்வை அன்பு கொண்டு நிறைத்து கொண்ட அந்த கன்னியாஸ்திரிகள் இடம் காமம் பிறக்க அங்கு இருந்து கிளம்பி விடுகிறான். புறக்கணிப்பு பசி என்று முழு பிச்சைகாரனாக தெரு தெருவாக சுற்றி கொண்டு கணேசன் வாழ்க்கை வாழ்கிறான் ஆனால் எந்த நிலையிலும் அவனுக்கு தற்கொலை எண்ணம் வந்ததே இல்லை . கிட்டா கார் ஓட்ட கற்று கொண்டு, பிறகு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து பிறகு மெடிக்கல் வைத்து உயர்கிறான் ஆனால் வாழ்வில் எந்த திருப்தியும் இல்லை,தன்னையே வெறுக்கும் நிலை. கணேசன் தன் வாழ்க்கை குறித்து பரம திருப்தி இறுதியில் ஞானியாக வேறு ஆகிவிடுகிறான். உனக்கு என்ன தேவையோ எதன் பொருட்டு நீ அவர்கள் மேல் எல்லாம் பிரியமாக இருந்தாயோ அதே போல் தானே அவர்கள் தேவைக்கு உன்னிடம் அவர்கள் பிரியமாக இருந்தார்கள், இங்கு அவர்களை விட வேறு யார் மீதும் பிரியமாக இருக்க முடியாது. ஆனால் நீ உன்னையும் இழந்து விட்டு உன்னையே உனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லும் நிலைக்கு வந்துடயே கிட்டா, தற்கொலை விட மோசமானது தன்னை வெறுப்பது தான், உயிரை அழிக்ரேனு உடலை அழித்து கொள்ளும் பைத்தியக்கார தனம் தான் தற்கொலை கிட்டா என்று கணேசன் கிட்டாவிற்கு உபதேசிக்கிறான்.

வாழ்க்கையில் நாம் எதையெதையோ  சாப்பிடுகிறோம், நம்மையும் எதெல்லாமோ சாப்பிட்டு ஏப்பம் விடுகிறது.

Thursday, June 15, 2017

ஒரு நாள் - கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம்.நாவல்              :ஒரு நாள்
எழுத்தாளர்     : கா நா சுப்ரமணியம்
வகை                : இலக்கியம்
பதிப்பகம்        : ஷாண்வி புக்ஸ்
பக்கங்கள்       : 176

ஹிட்லர் படையில் ஒரு போர் வீரனாக இருந்து பிறகு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அழைப்பின் பேரில் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் கிருஷ்ணா மூர்த்தி, உறவினர் யாரும் இல்லாததால் தன் மாமா வீட்டிற்கு அறை குறை மனத்தோடு சாத்தனூர் சர்வமானிய அங்கரஹாரத்தற்கு வருகிறார். பல ஆண்டுகளாக எந்த மாற்றமும் தனக்குள் அனுமதிக்காத அங்கரஹாரம் அது. ஜெர்மன், பர்மா இந்திய தேசிய ராணுவம் என்று பல போர் களங்களில் மனித வேட்டைகளை பார்த்து வாழ்ந்த மூர்த்தி ஒரு நாள் சாத்தநூர் அக்ரஹாரம் வந்து அங்கு இருக்கும் சாதாரண மனிதர்களின் வாழ்கையை பால கூறுகளாக விரிவாக மூர்த்தி அவர் மாமாவின் உரையாடல் மூலம் விரிகிறது நாவல். மனித வாழ்வின் பல்வேறு சிக்கல்களை தீர்த்துவிட முடியுமா என்று விவாதித்து பார்க்கிறார்கள். மனிதன் பொருப்புக்கள் இல்லாமல் தனியாக இருக்கவே விரும்புகிறான் ஆனால் அனைவர் வாழ்விலும் அவர்கள் சுமந்தே தீரவேண்டிய கடமைகள் உள்ளது என்பதை குறிப்பாக உணர்த்துகிறது நாவல். மனிதனின் வாழ்வில் ஆதார பிடிப்பு குடும்பம் என்னும் அமைப்பு, அதில் இருந்து எந்த சுதந்திர மனிதனும் விலகி விட முடியாது என்று மூர்த்தி மூலம் உணர்த்துகிறார் கா. நா சு.